மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது, தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தால் மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறிஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். அரசாங்கம் இது தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயா சிறிஜய சேரக தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது.எனவே, அபிவிருத்திக்கான அதிகார பகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே, இது மக்கள் மத்தியில் மீண்டும்
இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும். சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரனால் மாகாண சபைகளில் ஆயுதங்கள்
அற்ற பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம் – என்றும் கூறினார்.