கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். அரசாங்கத்தின் பலவீனத்தை கிராமத்துக்கு கிராமம் சென்று எடுத்துரைப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்
அநுதாரபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) கிராமத்துக்கு கிராமம் மக்கள் சந்திப்பை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட ஆளும் தரப்பினர் எதிர்கட்சியில் இருப்பதை போன்று பேசுகிறார்கள். சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசியல் கைதுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. எனக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலும் எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும் எந்த குற்றச்சாட்டுக்களும் சட்டத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் தொடர்ச்சியாகவே இந்த அரசாங்கத்தை கருதுகிறோம்.
நீதிமன்றத்தின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விசாரணை கட்டமைப்பை பலவீனப்படுத்துவதையும், அச்சுறுத்துவதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் பலவீனத்தை கிராமத்துக்கு கிராமம் எடுத்துரைப்போம். வாய்ச்சொல் வீரர்களிடம் பொறுப்பை கையளிக்க வேண்டாம் என்று தேர்தல் காலத்தில் மக்களிடம் குறிப்பிட்டோம்.இருப்பினும் மக்கள் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்பு சிதைவடைந்துள்ளது. அரசியல் பழிவாங்களுக்கு அவதானம் செலுத்துவதை விடுத்து மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். ஆகவே பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்றார்.