மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக பெற்றோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுஸருடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவர் மீதே பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பவுசர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சித்தாண்டி முருகன் கோயில் பின் வீதியுள்ள வீரக்குட்டி ரமேஷ் (வயது 39 ) 3 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பவுஸர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.