மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதி உயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கட்டிடப்பகுதியில் உள்நுளைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (06) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் மின்சார சபையினால் அதிஉயர்வான 3300 சக்தி மின்சாரத்தை சீராக்கி கட்டுப்படுத்தி, பாவனையாளர்களுக்கு அனுப்பும் கட்டிட பகுதியில் சம்பவதினமான இன்று (06) காலையில் மின்சாரசபை உத்தியோகத்தர்கள் சென்ற நிலையில், அங்கு மின்சாரம் தாக்கி கீழே வீழந்து படுகாயங்களுடன் இளைஞன் ஒருவர் கிடப்பதைக்கண்டு பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயங்களுடன் கிடந்த இளைஞனை மீட்டு, மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்ததுடன், வெட்டப்பட்ட மின்சார கம்பிகள் மற்றும் வெட்டுவதற்கான ஆயுதங்கள் துவிச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.