மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள் முற்றுகையிட்டு சோதனை செய்ததுடன், முத்துரை குத்தப்படாத மற்றும் அனுமதியற்ற 43 தராசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்
மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக செய்த முறைப்பாட்டுக்கமைய, மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளர் விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் வயல்பகுதிகளில் நெல் கொள்வனவு செய்யும் இடங்கள் உள்ளிட்ட 110 இடங்களை கடந்த இரு தினங்களாக முற்றுகையிட்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/DC8463CC-1B2D-4CCD-81B1-C61A3B8F3288.jpg)
இதன் போது அங்கு அனுமதியற்ற மற்றும் முத்திரையிடாத 43 தராசுக்களை கண்டுபிடித்து, பறிமுதல் செய்ததுடன், 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இடைத்தரகர்கள் வந்துதான் இந்த சட்டவிரோத தராசுகளை பாவித்து நெல்லை அநியாய விலைகளுக்கு கொள்வனவு செய்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இவ்வாறான இடைத்தரகர்களை தடை செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/10F889F0-EFE1-41BB-9FD7-A2F91AA78EEE.jpg)