மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முன்பள்ளியினை விருத்தி செய்வதற்கும், அங்குள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தியினை மேம்படுத்துவதற்குமான விசேட நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி குறித்த முன்பள்ளியில் இடப்பெற்றது.
இதன் போது பாடசாலை சமூகத்தின் கோரிக்கையினை ஏற்று இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் அவர்கள் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.

இதன்போது உரை யாற்றிய ஐயா சச்சிதானந்தம் அவர்கள், தற்போது தமிழர் பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு சமூக சீர்கேடான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது. அவற்றை தடுப்பதற்கு முன் பள்ளிகள் சிறந்த வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவினால் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பாடநெறிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்திலும் அத்தகைய சேவைகளை வழங்குவதற்காக தாங்கள் தயாராக இருப்பதுடன், இப்பாடசாலையிலும் உள்ள ஆசிரியர்கள் கோருகின்ற பட்சத்தில் இலவசமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் முன்பள்ளி டிப்ளோமா பாட நெறியை கற்பதற்குரிய ஒழுங்குகளை செய்துதர திட்டமிட்டுளோம்.

மேலும் ஆசிரியர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகளையும் வழங்கி முன் பள்ளி பாடசாலை தொடர்பான கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தில் அவை தொடர்பாக பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் நிகழ்வில் மட்/பட் உதயபுரம் தமிழ் வித்தியாலய அதிபர் பிரதி அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், திரு. நடராசா சச்சிதானந்தன் அவர்களிடம் உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் பௌதீக வள குறைபாடுகளை இனம் கண்டு தெரிவித்த வேளையில், தேவை கருதி பாடசாலையின் கூரைகளை மாற்றி தருவதற்கு I M H O நிறுவனத்தினை பாடசாலைக்கு தொடர்பு படுத்தி, பல கோடி ரூபாய் பெறுமதியான திருத்த வேலைகளை செய்து தந்ததாகவும், அந்நிறுவனத்தினால் இன்று பாடசாலை அழகு உடையதாகவும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு பொருத்தமானதாகவும் மாறி உள்ளது எனவும் கூறினார்.


