தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகளோ! அட்டைக்கத்திகளோ! நாமல்ல. எம் சமூகத்திற்கு ஒளி கொடுக்க எம்மை அர்ப்பணிக்கும் மெழுகுவர்த்திகள் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
காரைதீவில், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தலை மாத்திரம் மையமாக கொண்டு அரியாசனத்தினை சூடாக்குவதற்காக புறப்பட்ட அரசியல் கட்சியல்ல தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, அரசியல் ரீதியாக நலிவடைந்து அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகக் கூட மாற்று அரசியல் தலைமைகளிடம் மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்ட எம் கிழக்கு தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்த ஆயுதங்களை கழைந்து, ஜனநாயகப் பாதையில் பயணிப்பவர்களாகும்.
எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களோ! கட்சியின் போராளிகளோ! ஒருபோதும் அம்பாறை மாவட்ட தமிழர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு ஓடிவிடமாட்டோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கெதிராக பல யுத்திகளை கையாண்டு அம்பாறை மாவட்டத்தில் பல போலிப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்ததும் ஓடி விடுவார்கள் தமிழினத் துரோகிகள் என்றெல்லாம் எம் கட்சி மீது வசைபாடியவர்கள் பலர் தாம் தவறு செய்து விட்டோம், உண்மையான தமிழனத் துரோகிகள் யார்? தியாகிகள் யார்?என பேசத்தொடங்கிவிட்டார்கள்.
வாய்ப்பேச்சு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து செயற்பாட்டு அரசியலை நிலைப்படுத்தியவர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள். பிராந்தியக் கட்சியாக எம்மை நிலைப்படுத்தியுள்ள நாம் கிழக்கில் எங்கோ ஒரு மூலையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அங்கு நீதிக்காக குரல் கொடுக்கவும், தீர்வுக்காக பயணிக்கவும் ஒருபோதும் தயங்கமாட்டோம்.
அம்பாறை மாவட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய மார்க்கத்தினை நாம் கையில் எடுத்தியம்பிய போதும் மக்களை தவறான அரசியல் பாதைக்கு 72 வருடங்களாக இட்டுச் செல்லும் தமிழ் தலைமைகளின் மாய வலைகளை வீசி, திசை திருப்பியதனால் எம்மால் நாடாளுமன்ற மக்கள் பிரதி நிதித்துவத்தினை பெற்று, அரசியல் அதிகாரத்தினுடான மக்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
இருந்தாலும் வாக்காளர்களை ஏமாற்றும் போலி அரசியல் கலாசாரத்தினை மாற்றி தெளிவான அரசியல் நிலைப்பாட்டினை அம்பாறை மக்கள் எடுப்பதற்கான விளிப்பூட்டல்களை கட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பில் கரிசனையுடன் சேவை புரிய முன்வரும் தன்னார்வ இளைஞர்களையும், சேவையாளர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போட்டியிடும்.
நில ஆக்கிரமிப்பு நிர்வாக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக என்றும் அம்பாறை தமிழர்களின் குரலாக பயணிப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இக் கலந்துரையாடலில் கட்சியின் காரைதீவு மாவட்ட தலைமைக்காரியாலய பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், இணைப்பாளர்களான வில்சன், கோ.பிரசாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.