கடந்த 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் இன்று வரை கவனிப்பாரற்று தூர்ந்துபோகும் நிலையில் காணப்படுவதோடு, அங்குள்ள பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் காணாமல்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டவை ஆகும்.
மக்களின் சொத்துக்கள் இனியும் கள்வர்களால் சூறையாடப்பட இடமளிக்காமல், மீனவர் தங்குமடத்தையும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனர்நிர்மானம் செய்து, சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசிடம் கோருகின்றனர்.

தற்போது எமது மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் அழிவடைந்த நிலையில், தூர்ந்துபோய், துருப்பிடித்து காணப்படுகின்றன.
இனியும் இவற்றை அழியவிடாமல், துறை சார்ந்த திணைக்களத்தினரும் அரசாங்கமும் தூர்ந்துபோயுள்ள மீனவர் தங்குமடத்தையும் இயங்காதிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைத்துத் தாருங்கள் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் புனரமைக்கப்படும் பட்சத்தில் எமக்கு மாத்திரமின்றி, இப்பகுதியில் உள்ள சுமார் 5000 மீனவர்களுக்கு இது நன்மையாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 13 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உதிரிப்பாகங்கள் களவாடப்பட்டுள்ளன. ஏனையவை துருப்பிடித்த நிலையில் உள்ளன. நாட்டின் புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களுக்கான நற்செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே இயங்குவதால், எமது கோரிக்கையையும் அவர்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


