இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மரணத்திற்கு தாம் காரணம் என தெரிவிக்கப்படுவது ஒரு அரசியல் சூழ்ச்சி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
வானொலி ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில்,
நான் மாவையின் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையே தவிர அதற்கு முதல் நாள் அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்திருந்தேன். அவரின் குடும்பத்தாருடனும் உரையாடிவிட்டே வந்திருந்தேன்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-322.png)
இருப்பினும், பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டமை மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பிய தகவல்களை பார்த்த பின்னர், இறுதி சடங்கில் கலந்து கொள்வது குறித்து எனக்கு ஒரு யோசனை இருந்தது.
நான் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று ஒரு குழப்பநிலை ஏற்பட்டு விட கூடாது, என நினைத்தேன். தகவல்கள் வெளியானது போல சில கறுப்பு சட்டை அணிந்த நபர்கள், நிகழ்வில் இருந்து உள்ளே சென்ற மத்திய குழு உறுப்பினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டமை மற்றும் வெளியேற சொன்னமை எல்லாம் உண்மை தான்.
எனவே, அவ்வாறான சூழ்நிலையில் மேலும் நானும் சென்றிருந்தால், அது வரலாறு முழுவதும் மாவையின் இறப்பு நிகழ்வில், குழப்பநிலையை ஏற்படுத்தியது போல இருக்கும், அதனால் தான் நான் அங்கு செல்லவில்லை.
அப்படி ஒரு துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தி விட கூடாது என்பதால் தான் நான் அவ்வாறு செய்தேன். அதேவேளை, அங்கு சென்றவர்களை தடுத்தமை போன்ற அசிங்கமான செயற்பாடுகள் அங்கே இடம்பெற்றமை உண்மை.
வேறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் செல்லும் போது அவர்களை தடுத்த செயற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், அது ஒரு குறுகிய நோக்கங்களுக்காக அரசியல் செய்தவர்களால் நிகழ்ந்திருக்கலாம். அதற்காக ஒரு தனிநபரை குறிப்பிட்டு குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-323-1024x576.png)
கடந்த மாதம் 29ஆம் திகதி, தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
இதனை தொடர்ந்து, அவரின் மரணத்திற்கு சில முக்கிய அரசியல் பிரமுகர்களே காரணம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
அதேவேளை, மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்தில், 18 நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் உள்ளடக்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம், ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அத்துடன், குறித்த பதாகையில் குறிப்பிடப்பட்ட 18 பேரும் மாவை சேனாதிராஜாவின் இறுதி அஞ்சலியில் தடை செய்யப்பட்டவர்கள் என கூறப்பட்டிருந்ததுடன், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-324-1024x576.png)
அதேவேளை, மாவையின் இறுதி சடங்கின் போது, ஒரு குழு பதாகையில் குறிப்பிடப்பட்டவர்களை உள்நுழையாமல் தடுப்பதற்காக கறுப்பு சட்டை அணிந்த நிலையில் செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சேனாதிராஜாவின் இறுதி அஞ்சலியில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கவில்லை.
எனவே, அவரின் மரணத்திற்கு காரணமாக இருப்பதனாலேயே அவர்கள் மாவையின் இறுதி அஞ்சலியில் பற்கேற்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.
இவ்வாறான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், சத்தியலிங்கம் குறித்த நேர்காணலில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.