மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் 18 பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
யாழ்.நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-406.png)
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய குடியரசு தினமான கடந்த 26ஆம் திகதி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்கு செல்வதற்காக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.
அன்றையதினம் நானும், அவரும் சுகயீனமுற்றிருந்த சேனாதிராஜாவை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தோம். அப்போது அவருடைய உடல்நலன்கள் குறித்தே கலந்துரையாடினோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவருடன் கட்சி சார்ந்த விடயங்களையோ அரசியல் சார்ந்த விடயங்களையோ பேசியிருக்கவில்லை. மேலும், அவர் எம்முடன் அன்னியோன்யமாகவே உரையாடினார்.
அவரது உடல்நலக்குறைவை பொருட்படுத்தாது நாம் விடைபெற்றபோது எம்மை வழியனுப்பி வைப்பதற்காகக் கூட அவர் வரமுயன்றிருந்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-408.png)
அவ்விதமான நிலைமைகள் இருக்கின்றபோது எமக்கு எதிராக விசமத்தனமான பிரசாரம் செய்யப்படுகின்றது. குறிப்பாக, சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் கூட நாம், சேனாதிராஜாவுக்கு அழுத்தங்களை பிரயோகித்தோம் என்ற தனிப்பட கருத்துக்களை ஊடகங்களில் பதிவிட்டுள்ளமையானது வருத்தமளிப்பதாக உள்ளது.
இதனையடுத்து எமது கட்சியின் மத்தியகுழுவின் அங்கத்தவர்களான 18 பேரின் புகைப்படங்களுடன் கூடி பதாகையொன்று சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதில் நாம் தான் சேனாதிராஜாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்ற அடிப்படையில் வசனங்களும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-409.png)
அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன.
இந்தச் சக்திகள் தமிழரசுக்கட்சியை பிளவடையச் செய்ய வேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும்.
ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்ற போது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
சேனாதிராஜாவுக்கும், எனக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது” என தெரிவித்தார்.