கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரர் கந்தசாமி பிரபு தலைமையில் இறைவணக்கத்துடன் நேற்று (13) நடைபெற்றது.

மேற்படி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர், இ.சிறிநாத், எம்.எஸ்.நளீம் உட்பட தேசிய மக்கள் சக்தியின், வங்கி மற்றும் நிதி தொடர்பான மட்டக்களப்பு இணைப்பாளர் க.திலிப்குமார் பிரதேசத்தின் பல்வேறு அரச திணைக்களங்களிலும் கடமையாற்றும் அரச உயர் அதிகாரிகள்,கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எதிர்கலாத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.



அதிலும் குறிப்பாக கோறளைபபற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீராவேடை கிராமத்திற்கான எல்லை தொடர்பான விடயம் மற்றும் பாசிக்குடா சுற்றுலா தளத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலை வியாபார நடவடிக்கை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
மீராவேடை எல்லை தொடர்பான விடயத்தை நில அளவைத் திணைக்களம் கூடிய கரிசனை கொண்டு பக்கச்சார்பின்றி செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதாவது மீராவேடை கிராமத்தின் எல்லை நிர்ணயமானது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கமைய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மற்றைய தரப்பினரது கருத்துக்கள் உள்வாங்கப்படாமல், நில அளவை செயற்பாடுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சரியானதொரு எல்லை நிர்ணய வரைபடத்தை தயாரிப்பதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பாசிக்குடா சுற்றுலா தள மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிசாலையை அகற்றி வேறு இடத்திற்கு நகர்த்துவது தொடர்பாகவும், அங்கு கடைகளை வைத்துள்ளவர்களுக்கு மின்சாரம் போன்ற ஏனைய அடிப்படை வசதிகளை வழங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்வரவேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

இராணுவமோ,பொலிசாரோ எல்லோருக்கும் சட்டம் சமம் எனவும் இதில் ஏதும் பிரச்சினைகள் வரும் என்றால் எதிர்வரும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. பேத்தாழை மீன் பிடித் துறைமுகப் பகுதியில் தனி நபர் ஒருவர் தமது காணியினை ஆற்றோடு சேர்ந்தவாறு வேலி அமைத்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனை அகற்றி தருமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, இது வரை அகற்றப்படாத நிலைமை காணப்படுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
கரையோரம் பேணல் தினைக்களம் காலதாமத்திற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் மற்றும் குறித்த காணியின் கரையோரத்தில் உள்ள கண்டல் தாவரங்களை அகற்றுதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள விடயங்கள் காலதாமததிற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், மிக விரைவில் வேலிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துடன், உடனடி நடவடிக்கை அவசியமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் படகுகளை கட்டுவதற்கு இடப்பரப்பு போதாமல் உள்ளதாகவும், விஸ்த்தீரனத்தை அதிகரித்து தருமாறும், படகு திருத்துவதற்கான இடம் ஒன்றினை அமைத்து தருமாறும் அத்துடன் படகுகளுக்கு ஏற்படும் விபத்துக்களை தவீர்ப்பதற்கு புல்லாவி போன்ற இடங்களில் சமிக்கை விளக்குகளை அமைத்து தருவதற்கான கோரிக்கையை துறைமுக அதிகார சபை முகாமையாளர் முன்வைத்தார். அதற்கான திட்ட வரைபினை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள சில கிராமசேவகர் பிரிவுகளில் டெங்கு நோயின் தாக்கங்கள் காணப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதேச சபை மற்றும் கிராமசேவகர்களின் ஒத்துழைப்பு அவசியமென சுகாதார வைத்திய அதிகாரியினால் கருத்து முன்வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இங்கு டெங்கு நுளம்பு உற்பத்திக்குரிய சாத்தியமாக காரணிகள் காணப்படுவதாகவும் அவரால் கருத்து முன்வைக்கப்பட்டது. அத்துடன் மீராவோடைமற்றும் புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் மகப்பேற்று சிகிச்சை நிலையங்கள் நிரந்தரமான கட்டிட வசதியுடன் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதேபோன்று புற்றுநோய் மற்றும் ஏனைய தொற்றா நோயாளர்களின் வாழ்வாதாரதிற்கும், அவர்களின் நோய்க்கும் சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேற்படி விடயங்கள் தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்கள் என்பனவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவற்றுக்கான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் வைத்திய அத்தியட்சகரினால் முன்வைக்கப்ட்டது. அதிலும் குறிப்பாக வெளியிடத்தில் இருந்து வரும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தங்குவதற்கான தங்குமிட வசதியின்மை காரணமாக அவர்கள் வெளியேறிச் செல்லும் நிலைமை காணப்படுவதாகவும், அதற்கான நிரந்தர கட்டிட வசதியை ஏற்படுத்தி தருமாறும் கோறிக்கை முன்வைத்தர்.
சுத்தமான குடிநிர் வசதி, மின்சாரம், ஊழியரிடல் துவிச்சக்கர வண்டி நிறுத்திமிடம் திருத்தல்,என பல்வேறு வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இவற்றில் சிலவற்றுககு; தீர்வு காணப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவதற்கு அரச அதிகாரிகள் தடையாகவுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தங்களால் பிரதேச அபிவிருத்திக்கு நிதியினை கொண்டு வர காலதாமதம் ஏற்படுவதாக கவலை தெரிவித்தனர்.
அவ்வாறான நிலைமைகளை சீர் செய்து பொருத்தமான திட்டங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கோறளைப்பற்று பிரதேச சபையானது தான் பெற்றுக்கொள்ளும் நிதியினை சேமித்து வைத்துக்கொள்ளாமல் மக்களின் பல்வேறுபட்ட அபிவிருத்திக்கு பயன்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
எதிர்கால அபிவிருத்திக்கு சகல திணைக்களங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை குறித்த நேரத்திற்கு காலை 9.00 மணிக்கு ஆரம்பமான கூட்டமானது பிற்பகல் 2.00 மணி வரை நீடித்து விடயங்கள் அனைத்தும் அலசி ஆராயப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்காக ஒழுங்கமைப்புக்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
