தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இதேவேளை, அதிக வெப்பநிலை மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அதிக வெப்பநிலை காரணமாக உடல் வியர்வையாக நீர் மற்றும் உப்புகளை இழக்கிறது, இது ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நாட்களில் வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.