இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தேசிய வரிக் கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி திறனை பெரிய அளவில் மேம்படுத்துவதற்காக 2025 – 2029 காலகட்டத்திற்கான தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், தேசிய கட்டணக் கொள்கையின் அடிப்படையில் ஒரு எளிய, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய கட்டண கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இலங்கை 19 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்ட எதிர்பார்க்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வர்த்தக வசதிகள் மற்றும் வருவாய் வசூல் நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, தற்போதுள்ள சுங்கச் சட்டத்தைத் திருத்தி, புதிய சுங்கச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.