அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து, கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும்.
ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ், நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நேற்று (18) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தல் உள்ளூராட்சி மன்ற தேர்தலாகும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாகவும், அதில் போட்டியிடுவதற்காகவும் பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தும் இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்றங்களை கையகப்படுத்திய தமிழரசு கட்சி மற்றும் அதனோடு இணைந்த கட்சிகள் எவ்வாறு ஆட்சிகளை நடத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
பட்டிப்ளை, வவுணதீவு, போரதீவுப்பற்று போன்ற பல பிரதேசங்களில் கூட வீதிகளில் மின் விளக்குகளை கூட பொருத்த முடியாத அளவிற்கு அந்த உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக செயல்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமலும் போயிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், உள்ளூர் தலைவர்களை பாதுகாக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது.

உள்ளளூராட்சி மன்ற அதிகாரம் என்பது மிக மிக முக்கியமான தேவைபாடான அதிகாரமாக இருக்கின்றது. நாளாந்தம் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலங்களை பாதுகாப்பதற்கும், நிர்வாகங்களை பாதுகாப்பதற்கும் இது மிக முக்கியமாக இருக்கின்றது.
ஆகவே எனது சமூகம் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் உள்ளூர் ஆட்சி அதிகாரங்களை கையகப்படுத்த வேண்டும்.
அந்த அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து, கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும்.
ஆகவே அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணம் பூராகவும் நிச்சயமாக இளம் வேட்பாளர்களை மற்றும் துடிப்புள்ள வேட்பாளர்களை எம் சமூக ஆர்வலர்களையும் இம்முறை உள்ளூராட்சி மன்றத்தில் அதிகமான ஆசனங்களை கையகப்படுத்தும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே அனைவரும் வாருங்கள் ஒன்றாக இணைந்து எமது பிரதேசங்களை கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்போம். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.