உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவெல விலகியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் உறுப்பினரான நீதியரசர் இத்தவெல இந்த மனுவை விசாரணை செய்ய மறுத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை, அக்டோபர் 16, 17, 18 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடத்தப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னதாக அறிவித்தலை அனுப்பியிருந்தது.
சிறில் காமினி பெர்ணான்டோ, தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது.