மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பஙகள் வாழ்ந்துவரும் பாலமீன்மடு மீனவகிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள்வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை வீடீயோ எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்துவதாக பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கிராமம் மட்டுநகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளதுடன், பாலமீன்மடு மீனவ கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டபோதும் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேறவேண்டிய துர்பாக்கிய நிலமை ஏற்பட்டது.
இருந்தபோது அங்கு ஓலைக்குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும், அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாததால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழந்துவருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழந்துவரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரசகாணிகளை 5 ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர்வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பலர் அத்து மீறி ஏக்கர்கணக்கில் காணிகளை ஆக்கிரமித்துவருகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது, வீடு இன்றிய ஏழைமக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம்கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாகநர எல்லைக்குள் இன்றுவரை மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி வாழந்துவரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகின்றனர்?
