ஹாலிவுட்டின் பரபரப்பான பொழுதுபோக்குத் துறையின் நடிகர்கள், எழுத்தாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆக்கிரமிப்பு எதிராக பாதுகாப்பைக் கோரி போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில், உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix, ஒரு லாபகரமான வேலை வாய்ப்பை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிக ஊதியம் பெறும் AI தயாரிப்பு மேலாளர் பணிக்கு ஆள் தேவை என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக வியக்கத்தக்க ஆண்டு சம்பளம் $900,000 வரை கொடுக்கப்படும் என்று அந்த வேலைவாய்ப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட சுமார் 21 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் படைப்புக் களத்தில் AI இன் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எதிராக எழுத்தாளர்களும், நடிகர்களும் பாதுகாப்பைக் கோரி மே 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இலக்கிய மற்றும் கலைப் படைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹாலிவுட் ஏற்கனவே AI தொழில்நுட்பத்திற்கு எதிராகப் போராடி வரும் நிலையில், நெட்ஃபிளிக்ஸ் இப்படி ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த தொழில்நுட்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை நேரடியாக பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.
AI தயாரிப்பு மேலாளர் பதவியுடன், நெட்ஃபிளிக்ஸ் செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப இயக்குநர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அறிவித்துள்ளது. தங்களை போன்றோர்களை நம்பி பிழைப்பு நடத்தி வந்த உலகின் பெரும் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களிடையே சலசலப்பை அதிகரித்துள்ளது.
நெட்ஃபிக்ஸ், அதன் இணையதளத்தில், இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தை ஆழமாக புகுத்தி வருகிறது. தனிப்பயனாக்கப்பட்ட வீடியோ பரிந்துரைகளை குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்குவது முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பை மேம்படுத்துவது, நிறுவனத்தின் சலுகைகளை வடிவமைப்பதில் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் – அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் அண்ட் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ் (SAG-AFTRA) நடிகர்களுக்காகவும், ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா எழுத்தாளர்களுக்காகவும் ஏற்பாடு செய்த வேலைநிறுத்தம், தொழில்துறையில் குறிப்பிடத்தக்க கவனத்தையும் ஆதரவையும் தற்போது பெற்று வருகிறது. பங்கேற்பாளர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொண்டு, மனித படைப்பாற்றலை பாதுகாப்பது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஹாலிவுட் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்பிரச்னை தொடர்பாக பலர் தங்களின் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். இந்த துறையில் பெரும் பங்காற்றிய படைப்பாளர்களை நாம் தொழில்நுட்பத்திற்காக மறந்தோ அவமதித்தோ விடக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.