அல்ஜசீராவின் பேட்டி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தன்னிடம் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் குழுவின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் மெஹ்டி ஹசனுடன் இணைந்து தன்னிடம் கேள்வி கேட்டவர்களில் இருவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாசற்குணநாதன் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வார் என எனக்கு தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள ரணில்விக்கிரமசிங்க அவருடன் கொள்கைரீதியில் முரண்பாடுள்ள போதிலும் அவரை எனக்கு தெரியும் என்பதால் நான் சற்று ஆறுதலாக உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவரை நீக்கிவிட்டு வேறு இருவரை சேர்த்துள்ளனர் அவர்கள் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என எனக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நான் வழங்கிய பதில்களின் முக்கிய விபரங்களை அவர்கள் ஒளிபரப்பவில்லை என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க நான் உள்ளுர் ஊடகங்களுடன் பேசும்போது அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்,நல்லது மோசமானது அனைத்தும் ஒலிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அல்ஜசீரா எனது இரண்டு மணிநேர பேட்டியில் ஒரு மணிநேரத்தை மாத்திரம் வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.