சமஷ்டி என்பது வெறுமனே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மட்டும் உரித்தானது அல்ல. சமஷ்டி என்பது தனிவுடமைவாதம் அல்ல அது பொதுவுடமைவாதம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழில் நேற்றையதினம் (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமது இலக்காக சமஷ்டியைத் தான் கொண்டுள்ளனர். அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டியை வலியுறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்கின்றனர். அனைவருக்கும் மக்கள் ஆணை வழங்கப்பட்டிருப்பது சமஷ்டிக்காகவே.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி கூட சமஷ்டியையே வலியுறுத்துகின்றது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற சுலோகத்தின் அடிப்படைமிலேயே செயல்படுகின்றது.
அனைத்து தமிழ் கட்சிகளும் சமஷ்டி என்ற சொல்லைத்தான் வலியுறுத்துகின்றன. ஆனால் அதனை அடையும் வழிகளில் தான் மாறுபடுகின்றன. எனவே சமஷ்டி என்பது வெறுமனே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள். முன்னணிக்கு மட்டும் உரித்தானது அல்ல. சமஷ்டி அந்தக் கட்சிக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல. அது பொதுவுடமை.
சமஷ்டிக் கோரிக்கையானது தந்தை செவ்வா காலத்திலிருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து முதலிலே வடக்கு கிழக்கிலாவது மாகாண சபைத் தேர்தலை வையுங்கள் என்ற கோரிக்கையை ஒருமித்து முன்வைக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலின்போது, முதலில் 13ஐ அமுல்படுத்திவிட்டு சமஷ்டிக்குச் செல்லலாம். என்ற கட்சிக்கு வாக்களிப்பதா? அல்லது நேரடியாக சமஷ்டி வேண்டும் என்ற கட்சிக்கு வாக்களிக்கலாமா? என்பதை மக்கள் தீர்மானித்து தீர்ப்பை வழங்கட்டும்.
தேர்தல் மூலம் கிடைத்த மக்கள் ஆணையை வைத்துக்கொண்டடு இலங்கை ஜனாதிபதியுடனும் இந்திய அரசாங்கத்துடனும் பேசலாம் எனத் தெரிவித்தார்.