சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த (07) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் “எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி” என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய வைபவ ரீதியாக மகளிர் தின நிகழ்வுகள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினாலும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய வளாகத்தில் இடம்பெற்றது.

மும்மத இறைவணக்கத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சுபா சதாகரனின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமானது.
சர்வதேச மகளிர் தின சிறப்புரைகள் இங்கு இடம்பெற்றதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய பிரதேச வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் கல்வி ஊக்குவிப்பு தொகைகளும் இங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த மகளிர் தின நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் விஸ்வ பரத கலாலயா நாட்டிய பள்ளி மற்றும் நிருத்திய கலாலய மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அதேசமயம் குறித்த நிகழ்வில் பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது.
மேலும் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும், மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் களிப்பூட்டும் வகையில் வினோத விளையாட்டுக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மண்முனை வடக்கு மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திர சோதி ஜெயதீஸ்வரன் அவர்களின் நன்றி உரையுடன் மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.























