தேங்காய் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்இன்று (10) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தேவையான தென்னை நாற்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை நாற்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் தேங்காய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, நாட்டில் தினசரி தேங்காய் நுகர்வு 2 மில்லியன் தேங்காய்களால் குறைவடைந்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
நாட்டில் தினசரி தேங்காய் நுகர்வு 5 மில்லியன் தேங்காய்களாக இருந்தாலும், தற்போதைய நிலைமை காரணமாக, தினசரி தேங்காய் நுகர்வு 3 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் 60 முதல் 65 மில்லியன் தென்னை மரங்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் தேங்காய் சாகுபடி 3,000 மில்லியன் தேங்காய்களுக்கு மேல் இருப்பதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.