குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில் முன்னிலையான திஷான் குணசேகர, சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அங்கிருந்து வௌியேறிய போது ஊடங்களிடம் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக இருந்தபோது கிரிவெஹெரே சோரத தேரரால் கட்டிய வீடு குறித்து விசாரிக்க தன்னை அழைத்ததாகக் கூறினார்.
அத்துடன் நேற்று (09) தனது வீட்டை சிவில் உடையில் அணிந்து வந்த குழுவினரால் சோதனையிடப்பட்டதாகவும், இது ஒரு பொருத்தமற்ற செயல் என்றும் கூறினார்.

“கதிர்காமத்தில் மஹிந்த ராஜபக்ஸவிற்காக கிரிவெஹெரே சோரத தேரரால் கட்டப்பட்ட வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவே என்னை அழைத்தனர்.
எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதாவது அந்த வீட்டைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியும்.
ஏனென்றால் அந்த வீட்டைக் கட்டியவர் இப்போது நோய்வாய்ப்பட்டிருக்கிறார். சோரத தேரர் இப்போது இல்லை. அவர் காலமானார்.
அந்த வீடு மஹிந்தவுடையது அல்ல. சோரத தேரரே அதற்காக பணத்தைச் செலவிட்டார், விமலரத்ன என்ற நபரே கட்டினார்.
அந்த நேரத்தில், போர் வென்றபோது, மஹிந்தாவிற்கு ஒவ்வொரு விகாரையிலும் அப்படி ஒரு வீடு, ஒரு அறை கட்டப்பட்டிருந்தது.” என்றார்