இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு துணைபோனதால் சாத்தான்களின் குழந்தைகள் ஆகிவிட்டார்களே என்ற ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் ஆவேசம் அடைந்தார்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னையில் கடந்த 30ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசிய பேச்சு சர்சையானது. பல்வேறு தரப்பிலும் சீமானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய சமூக மக்களை சாத்தானின் குழந்தைகள் என சீமான் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து அநீதிக்கு துணைபோவதால், இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் சாத்தானின் குழந்தைகளே என தெரிவித்தார். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தமிழர்களே எனும்போது அவர்களை சிறுபான்மையினர் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல எனக்கூறிய அவர், அவர்களை சிறுபான்மை என யாரேனும் கூறினால் செருப்பால் அடிப்பேன் என்றார்.