பௌத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் திருகோணமலை மாவட்டத்தில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதத்தில் கமத் தொழில்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தொடர்பாக கருத்துகளை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை பௌத்த பிக்குமார் கையகப்படுத்தியுள்ளனர். ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய விடாமல் தடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது. இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் அரிசி விலை அதிகரிக்கும் போது அரசுக்கு மக்கள் செல்வாக்கு குறையும். எனவே அரசு தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமாயின் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த நிலங்களை விடுவித்து நெல் உற்பத்தியைப் பெருக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.