இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலத்துறை ஆட்ட வீரரான செயின்ட் அபித் அலி காலமானார்.
செயின்ட் அபித் அலி தமது 83 ஆவது வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.
1967 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டுவரை இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அபித் அலி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1018 ஓட்டங்களையும் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அபித் அலி 1974 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டுவரை ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1990களின் பிற்பகுதியில் மாலத்தீவுகளுக்கும், 2002 மற்றும் 2005க்கு இடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பு, 2001–02ல் ரஞ்சி டிராபியில் தென் மண்டல லீக்கை வென்ற ஆந்திர அணிக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

அபித் தனது இறுதி காலத்தில் கலிபோர்னியாவில் வசித்து வந்துள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு ஸ்டான்போர்ட் கிரிக்கெட் அகாடமியில் நம்பிக்கைக்குரிய இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
இதேவேளை 1990 களின் முற்பகுதியில், அபித் அலியின் இரங்கல் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
அப்போது அவர் ஒரு இதய பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து உயிர் பிழைத்துள்ளார். அவரது மரணம் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஃபரூக் இன்ஜினியரால் தவறாக ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.