மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இதுவரை 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்– மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில் இருந்து 146 பேரை தெரிவு செய்வதற்காக நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் 3.00 மணிவரை அரசியல்கட்சி, சுயேச்சைக்குழுக்கள் உட்பட 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் ஆணையத்தில் நேற்று புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2025 ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பணிகளையும் ஆரம்பித்துள்ளோம். இம்முறை வாக்களிக்க 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் 404 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு கோரிக்கை தேர்தல் திணைக்கள ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய எமது மாவட்டத்தில் கடந்த 2025 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் நோட்டிஸ் வெளியிடப்பட்டது. அதன் பிரகாரம் மார்ச் மாதம் 3 ம் திகதியில் இருந்து மாச் 19 ம் திகதி பகல் 12.00 மணிவரை அரசியல்கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை தேர்தல் அலுவலகத்தில் செலுத்தமுடியும்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு மார்ச் மாதம் 17 ம் திகதி தொடக்கம் 20 ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை மட்டக்களப்பு பழைய மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
மட்டக்களப்பு மாநகரசபையில் 20 வட்டாரங்களில் இருந்தும், மேலதிக உறுப்பினர்களில் இருந்தும் 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இதில் 60 வாக்களிப்பு நிலையங்களில் 70 ஆயிரத்து 24 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏறாவூர் நகரசபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 20 ஆயிரத்து 561 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா.;
இதேவேளை காத்தான்குடி நகர சபையில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 34 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 67 ஆயிரத்து 450 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அவ்வாறே கோறளைப்பற்று பிரதேசபையில் 23 பேரை தெரிவு செய்வதற்கு 58 ஆயிரத்து 318 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 18 பேரை தெரிவு செய்வதற்காக 24 ஆயிரத்து 659 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனனர். கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கு 18 பேரை தெரிவு செய்வதற்காக 20 ஆயிரத்து 434 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு 20 பேரை தெரிவு செய்வதற்கு 50 ஆயிரத்து 612 பேர் தகுதி பெற்றுள்ளனர். மண்முனை பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 26 ஆயிரத்து 931 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மண்முனை மேற்கு பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 25 ஆயிரத்து 723 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் 16 பேரை தெரிவு செய்வதற்காக 21 ஆயிரத்து 868 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், போரதீவு பிரதேச சபையின் 16 பேரை தெரிவு செய்வதற்காக 34 ஆயிரத்து 154 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தமாக மாவட்டத்தில் ஒரு மாநகரசபை இரண்டு நகரசபை மற்றும் 9 பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கில் 144 வட்டாரங்களில் இருந்து 146 உறுப்பினர்கள் தெரிவு செய்யபடவுள்ளதுடன், மண்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி வட்டாரத்தில் இருந்து இரண்டு உறுப்பினர்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் ஒரு வட்டாரத்தில் இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை மாவட்டத்தில் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் நிலையம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பமாகும், இந்த நிலையம் பழைய கச்சேரியில் இயங்கும் எனவே தேர்தல் வன்முறையுடனான முறைப்பாடுகளை நேரடியாகவே அல்லது வட்அப் இலக்கம் மூலம் அல்லது, தொலைபேசி ஊடாகவே, ஈமெயில் ஊடாகவே தெரிவிக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.