பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14) மேற்கொண்டுள்ளனர்.
யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பிரதான வீதிக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது, அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும், விபத்துக்களில் இருந்து எங்களை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு அறிவூட்டல்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்து காணொளியாக திரை மூலம் காண்பிக்கப்பட்டது.
குறிப்பாக பாதசாரிகள் வீதியில் எவ்வாறு நடந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டுனர்கள்- துவிச்சக்கர வண்டி- முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் எவ்வாறு பயணிக்க வேண்டும் மற்றும் வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கு காணொளியாக திரையிடப்பட்டது.

இதன் போது மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், போக்குவரத்து பொலிசார்,மருதங்கேணி பொலிஸ் அதிகாரி, பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.