மட்டக்களப்பில் சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி” ஒன்று நடைபெற்றிருந்தது.
மாணவர்களின் பல்வேறு வகையான அறிவியல் முயற்சிகள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கமான ஆய்வுகள் என்பன இதன் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பல்வேறு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்ததுடன், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் மாணவர்கள் தங்கள் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த கண்காட்சி மாணவர்களுக்கு அறிவியலின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஒன்றை ஏற்படுத்தியிருந்ததோடு, எதிர்காலம் நோக்கிய புத்தாக்க முயற்சிகளுக்கு ஒரு உறுதியான அடிப்படையாக அமைந்துள்ளது.
இதன் போது “இந்நிகழ்வு மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான தளமாக அமைந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை” என ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேசமயம் குறித்த அறிவியல் கண்காட்சி நிகழ்வில் மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, ஆனைப்பந்தி பாடசாலை, சிசிலியா பாடசாலை, ஜோசப் வாஸ் வித்தியாலயம் போன்ற பலதரப்பட்ட பாடசாலைகளிலிருந்து அறிவியலில் நாட்டமுடைய மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்ட வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














































