ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் பொன்னம்பலம் இராமநாதன் அறியப்பட்டளவு பொன்னம்பலம் அருணாசலம் அறியப்படவில்லை. அது ஆச்சரியமானதல்ல. அரசியல் தளத்தில் எதிரும் புதிருமான மனிதர்களாக இருவரும் இயங்கினர். இருவரது அக்கறைகளும் வேறுவேறாக இருந்தன. இவ்விருவரது செயல்களையும் அதற்கான இயங்கியலையும் விளங்கிக் கொள்ளவது சீரழிந்து போயிருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியல் செல்நெறியின் முதற்கோ ணலை யும் அதற்கு வழியமைத்த குறுந்தேசியப் பார்வையையும் விளங்கிக்கொள்ள உதவும். பிரித்தானிய கொலனியாதிக்கத்தின் கீழ் இலங்கையில் கொழும்பைமையமாகக் கொண்ட ஒரு புதிய தமிழ் மேட்டுக்குடியினர் தோற்றம் பெற்றனர்.
பிரித்தானியரால் ஊக்குவிக்கப்பட்ட புதிய விவசாய உற்பத்திகளின் விளைவாக தென்னிலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள் இந்த மேட்டுக்குடிகளாகினர். இவர்களது பிரதான வர்த்தகப் பண்டமாக புகையிலை இருந்தது. இவர்கள் கொழும்பில் சொத்துக்களில் முதலிட்டனர். வீடுகளையும் நிலங்களையும் வாங்கினர். இதில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் உயர்கல்வியில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாகக் கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் மேட்டுக்குடி வர்க்கம் தோற்றம் பெற்றது. இவ்வாறு தோற்றம் பெற்றவர்களேஇருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவோராக இருந்தனர். இதில் குறிப்பிட்டத்தக்க பலரில் இராமநாதனும் அருணாசலமும் முக்கியமானோர். இலங்கையின் வடபுலத்தில் வேளாளசாதியினர் மேனிலையில் இருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக், கல்விக்கும் சமூக மேம்பாட்டுக்குமான வாய்ப்புக்கள்
மறுக்கப்பட்டன. இவை திட்டமிட்டு நடந்தன. பிரித்தானியர் பாடசாலைகளை உருவாக்கி கல்வி வாய்ப்புகளை வழங்கியிருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் நிலவிவந்த இறுக்கமான சாதிய ஒடுக்குமுறை மேட்டுக்குடி அல்லாதோருக்கு வாய்ப்புக்களை மறுத்தது. இந்தப் பின்புலத்திலேயே தமிழர் அரசியலைக் கணிக்க வேண்டியுள்ளது. தமிழர் அரசியல் என்பது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது.
முதலாவது, அது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டிருந்தது. இதுவே இன்றும் ‘யாழ்மையவாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது, அது தமிழ்ச் சைவ வேளாளநலன்களையே வற்புறுத்தியது. இவ்விரு பண்புகளும் இன்றும் தமிழ்த் தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதைஅவதானிக்கவியலும். இப்பண்புகளுடன் தோற்றம் பெற்ற தமிழர் அரசியல் கோளாறுடையதாகவேஇருந்தது. அரசியற்பரப்பில் தமிழரின் அரசியலின் தலைமை கொழும்பைத் தளமாகக் கொண்டிருந்தது. ‘அப்புக்காத்து அரசியலின்’ தொடக்கங்கள் வேர்விடத் தொடங்கியிருந்தன. ‘பிரித்தானியருடன் ஆங்கிலத்தில் சரிசமமாகக் கதைத்து தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பது’ என்ற கதையாடல் அப்போது செல்வாக்குச் செலுத்தியது. இப்போது ஒரு நூற்றாண்டு கழித்து பிரித்தானியரின் இடத்தை சர்வதேச சமூகம் நிரப்பியுள்ளது, ஆனால் அதே கதையாடல் தொடர்கிறது என்பது தான் அவலமான யதார்த்தம்.
இவ்வகைப்பட்டதான தமிழர் அரசியல் இயங்கியது. இன்றும் இயங்குகிறது. கொழும்பைத் தளமாகக் கொண்டதலைமை யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனது அதிகாரத் தளத்திற்கு வெளியிலிருந்தபெரும்பான்மையான தமிழரின் நலன்களபற்றியோ அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியோ எதுவித கவனமும் இருக்கவில்லை. யாழ்மையவாத சிந்தனை ‘தமிழர்’ என்ற
பொது அடையாளத்தை நோக்கி நகர்வதைஅனுமதிக்கவில்லை. இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தசாதிய ஒடுக்குமுறைகளை விட யாழ்க் குடாநாட்டில் சாதிய வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் மிகவும் ஆழமானதாகவும் அன்றாட வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்ததாகவும் இருந்தது. எனவே தமிழருக்கான அடையாளம் என்ற தேவையோ, தமிழ்த்தேசியம் என்ற கோஷமோதேவைப்பட்டிருக்கவில்லை. 1920களில் தமிழ்மேட்டுக்குடிகள் சிங்கள பௌத்தபேரினவாதத்தை நேரடியாக எதிர்கொள்ளும் வரை தமிழ்த்தேசிய இன அடையாளம் என்பது குறித்து தமிழ்மேட்டுக்குடிகளும் அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் சிந்திந்திருக்கவில்லை. இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியையும் சொல்லியாக வேண்டும். வடக்கிலிருந்த தமிழரே முதல்முதலாகமுற்போக்கான அரசியல் சிந்தனையை வெளிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினரும் சில மேட்டுக்குடியினரும் இணைந்து ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இந்திய விடுதலைப் போராட்டம் தந்த உற்சாகம் இதற்கு முக்கிய காரணியாகியது.
இலங்கைக்குச் சுயராச்சியம் கோரிய முதலாவது அமைப்பு என்ற வகையில் யாழ்ப்பாண வாலிபர்காங்கிரஸ் முக்கியமானது. 1915 சிங்கள-முஸ்லீம் கலவரத்தைத் தொடர்ந்த பொன்னம்பலம் இராமநாதனின் நடத்தை மிகுந்த விமர்சனத்துக்கு உரியது. அவரது நடத்தை யாழ் சைவ வெள்ளாளஉயர்குடியின் பிரிதிநிதியாக இராமநாதன் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. இதேவேளை இராமநாதனில் இருந்து
மிகவும் வேறுபட்டவராகவும் உண்மையான தேசியவாதியாகவும் இருந்தவர் பொன்னம்பலம் அருணாசலம். மலையகத் தமிழருக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் என்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் வரலாற்றில் காத்திரமான பங்களிப்பைவழங்கியவர் அருணாசலம்.
1915ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து ‘அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அவை அவசரமானவை என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தியவர் அருணாசலம். 1917ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ம் திகதி இலங்கைத் தேசிய சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் ‘எமது அரசியல் தேவைகள்’ என்ற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரை முக்கியமானது. அவர் அதில் இலங்கையர் அனைவரதும்
விடுதலை பற்றிப் பேசினார். உழைக்கும் மக்களின் முக்கியமான பங்களிப்புப் பற்றிப் பேசினார்.இக்காலப்பகுதியில் இவரது இந்த உரை மிகுந்த புரட்சிகரமானதாக இருந்தது.
இக்காலப்பகுதியிலேயே சர்வசன வாக்குரிமையின் அவசியம் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தவர் அருணாசலம். டொனமூர் ஆணைக்குழு சர்வசன வாக்குரிமையை முன்மொழிந்தபோது அதை முழுமையாக எதிர்த்தவர் இராமநாதன். ஆவர் படித்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இது மறுக்கப்பட்ட போது, படித்த பெண்கட்கு மட்டுமே வாக்குரிமை இருக்க வேண்டும் என்றுவைத்திலிங்கம் துரைசாமியால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பொன்னம்பலம் இராமநாதன் முழு
மனதோடு ஆமோதித்தார்.
இராமநாதனின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம், யாழ்ப்பாணச் சைவவேளாளப்பரம்பரையினரது நலன்கள் குறித்தஅவரது அக்கறையே. இதனால் தான் அவர் கல்வியையும் ஆண் பாலினராய் இருப்பதையும் வாக்களிப்பதற்கான தகுதிகளாக்கினார். அக்காலப்பகுதியில் படித்த பெண்களிற் சன விகிதப்படி கூடிய பகுதியினர் அன்று கிறிஸ்தவர்களாகவே இருந்தனர். இவ்விதமான மிகக்குறுகலான பார்வையே இராமநாதனுடையது. இதற்கு முற்றிலும் மாறாகப் பரந்து தளத்தில் விரிந்த சிந்தனையோடு செயல்பட்டவர் அருணாசலம். 1919இல் இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவம் இருந்தார். இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது தொழிலாளர் சங்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பரந்த நோக்குக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
1919 ஆகஸ் டில் அவர் எழுதி வெளியிட்ட‘ஊயளந கழச ஊழளெவவைரவழையெட சுநகழசஅ in ஊநலடழn’ என்ற பிரசுரமாகும். இதில் இலங்கையர் அனைவரதும் சுயகௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து இலங்கையரும் வேறுபாடின்றி நடாத்தப்பட வேண்டுமென்றும் கோருகின்றார். அருணாசலம் தொடக்கத்திற் தாராண்மைக் கட்சியின் அனுதாபியாகத் தனது அரசியல் வாழ்வைத்
தொடங்கினாலும் பின்னர் தொழிற்கட்சியின் கருத்துக்கள் அவரைக் கவர்ந்தன. தொழிலாளர் தமது உரிமைகட்காகக் போராட்டச் சங்கங்கள் அமைப்பது தொடங்கிப் பிற்காலத்தில் சர்வசன வாக்குரிமை போன்றனவற்றுக்கும் ஆதரவாக நின்ற அளவில் அவர், தனது சகோதரர் பொன்னம்பலம் இராமநாதனின் எதிர்த் துருவம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தகால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் அன்றைய அரசியல் தலைவர்களிடையே இலங்கைத் தேசியக் கண்ணோட்டத்திற்கு
சிந்தித்தவர்களில் அவருக்குச் சிறப்பான இடம் உண்டு.
பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள் பலர் குறித்தஒரு விடயத்தில் உடன்படுகிறார்கள். யாழ் வேளாள உயர்குடியில் இருவரும் பிறந்து வளர்ந்த போதும் இருவரது அரசியற்பாதைகளும் மிகவும் வேறுபட்டவை. யாழ் சைவ வேளாள உயர்குடி நலன்களைப் பேணிக்காப்பதில் இராமநாதன் கண்ணும்
கருத்துமாக இருந்தார். மாறாக மலையக் தமிழ்த் தொழிலாளர்கட்காகவும் சகல தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்ததோடு அதற்கான அரசியல் ஆதரவைத் திரட்டவும் செயற்பட்ட அருணாசலம் தனது வர்க்கத்தினரினின்று மிகவும் வேறுபட்டவராகத் தெரிந்தார்.
அவர் இலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி உழைப்பாளிகள் குறித்து அதிகம் அக்கறை காட்டினார்.இராமநாதன் தனது இறுதிக்காலத்தில் இறுகிப்போன சைவவேளாள மேட்டுக்குடி அகங்காரத்தால் கட்டுண்டிருந்தார். மாறாகஅருணாசலம் உழைக்கும் மக்கள் நலம்நாடும் தீவிர நிலைப்பாட்டை உடையவராகஇருந்தார். எமது முன்னோடியாக இருவரில் நாம் யாரைக் கொள்கிறோம் என்பது நாம் யாருடைய நலன்களை நாடுகிறோம் என்பதைச் சொல்லும்.