“பூஜா பூமி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விகாரைகள் புனரமைக்கப்படுவதை போன்று இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

புத்தசாசன மற்றும் சமய அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. கிராமிய பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்காக அவதானம் செலுத்தியுள்ளது. அதேபோன்று ‘பூஜா பூமி’ திட்டத்தின் கீழ் விகாரைகளை போன்று இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
இதேவேளை எமது வேலைத்திட்டத்தின் கீழ் பிரிவெனா பாடசாலை தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். அதேபோன்று இந்து மதம் தொடர்பிலும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். குறிப்பாக இந்து பிள்ளைகளுக்கான அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்துக் கலாச்சார திணைக்களத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலயங்களின் அபிவிருத்திக்காக விசேட ஒதுக்கீடுகளை செய்யவுள்ளோம். அதன்படி இந்துக் கலாச்சார திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். மத தலங்கள் அனைத்தும் வேறுபாடின்றி அபிவிருத்தி செய்யப்படும். அனைத்து இன மக்களின் கலை மற்றும் கலாச்சாரங்களுக்கும் முன்னுரிமை வழங்குவோம் என்றார்.