எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 கட்சிகள் மற்றும் 23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்களும், 3 சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்களும், 2 சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்களும், பல சபைகளில் அர்ச்சுனா அணியின் (சுயேச்சைக் குழு) வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மேற்படி தரப்புக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் அர்ச்சுனா அணி (சுயேச்சைக் குழு) தாக்கல் செய்த வேட்புமனுக்களில் பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனு மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் நேற்று (20) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தன.
இதில் 136 கட்சிகளும், 23 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தன.
அவற்றில் 22 கட்சிகளுடைய வேட்புமனுப் பத்திரங்களும், 13 சுயேச்சைக் குழுக்களுடைய வேட்புமனுப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கெளசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் இராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீலங்கை கம்முனிஸ்ட் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ் தலைமையிலான சுயேச்சைக் குழுவும், குணரட்ணம் குகானந்தன் தலைமையிலான சுயேச்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடருவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் அந்தக் கூட்டணியின் சார்பில் ஊடகங்களுக்குச் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போது,
“யாழ். மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளைத் தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்புமனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுவில் 35 வயதுக்கு உட்பட்டவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் சில போட்டோ பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் கையளிக்கப்படவில்லை எனும் காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டதாக எமக்குக் கூறப்பட்டுள்ளது.
அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள்தான் கையளிக்கப்பட்ட வேண்டும் எனக் கடந்த 15ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தற்போது கூறுகின்றார்கள்.
ஆனால், அது தொடர்பில் எமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை. இவை திட்டமிட்ட முறையில் எம்மை நிராகரிக்கச் செய்யப்பட்ட ஏற்படாகவே பார்க்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டைத் தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.
இது தொடர்பில் நாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.” – என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.