அதிகரித்து வரும் ஆழ் கடல் மீன் களவிற்கும், மீன் கொள்ளையர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்வு கிடைக்கும் வரை கடல் தொழிலுக்கு செல்வதில்லை எனத் தெரிவித்து இன்று (13) வாழைச்சேனை மீன் பிடி துறைமுக பகுதியில் ஆழ்கடல் மீனவர் அமைப்புகளினால் நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை துறைமுகப் பகுதியில் ஒன்று கூடிய மீனவர்கள், கடல் கொள்ளையர்களின் தலைவனை கைது செய்ய வேண்டும். மீனவர்களின் கடல் வாழ்க்கையை கிளீன் ஸ்ரீ லங்காவாக மாற்றித் தர வேண்டும், மீன் பிடித்து பிழைக்கும் எங்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக வந்து, துறைமக முன் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பியவாறு தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வழங்கி வைத்தனர்.

அதனை பெற்றுக் கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடல் படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக இதன் போது ஊடகங்களுக்கு தெரிவித்தார். இச் செயற்பாட்டினால் கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடித்தொழிலுக்கு செல்லவில்லை.
சம்பவம் பற்றி தெரிய வருகையில் ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வலைகளில் படும் மீன்களை மீன் கள்வர்கள் வலையோடு வெட்டிக் கொண்டு செல்லும் செயற்பாடு பிரதேச மீனவர்களின் தொழிலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்களின் இவ் அநிதியான செயற்பாட்டை முற்றும் முழுதாக தடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனை முதல் போடாத இலகுவான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இச் செயற்பாடு கடந்த 15 வருட காலமாக அம்பாறை பிரதேச கடல் பகுதியில் இடம்பெற்று வந்தபோதிலும் தற்போது பாசிக்குடா கடல், திருகோணமலை பிரதேசத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை, மாங்கேணி, களுவன்கேனி, காயான்கேணி களுவாஞ்சிக்குடி, களுதாவளை,மாங்காடு, தேற்றாத்தீவு,போன்ற இடங்களில் உள்ள கரையோரப் பகுதியைச் சேர்ந்தோர்களில் சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கினறனர்.
அதிவேகம் கொண்ட இரு குதிரை வலு சக்தி கொண்ட இயந்திரப் படகுகளில் இரவு வேளைகளில் வரும் கொள்ளையர்கள் இவ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் தன் வசம் வெடிப்பொருள் உள்ளதாக தெரிவித்து அச்சமூட்டி மனசாட்சியின்றி வலையில் பட்ட மீன்களை களவாடி செல்வதாக தெரிவிக்கின்றனர்.
சிலரை அடையாளம் கண்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும் உறுதிப்படுத்த முடியாததால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.அதே தொழிலையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு பின்னனியில் சில பணம் படைத்தோர் இருந்து இவ் களவு தொழிலை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
இச் செயற்பாட்டினால் கடல் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாத நிலை காணப்படுவதனால் 1200 இற்கும் மேற்ப்பட்ட அம்பறை, வாழைச்சேனை மற்றும் தென்பகுதியைச் சேர்ந்த ஆழ் கடல் படகுகள் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் தரித்து நிற்க வைக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கடல் தொழில் நீரியல் வள மீன் பிடி அமைச்சரின் கவனத்திற்கு விடயம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவரது சரியானதொரு பதில் கிடைக்கும் வரை ஆழ் கடல் தொழிலுக்கு செல்வதில்லை என தெரிவித்து பஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சந்தையில் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மீனுக்கும் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.






