சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தொடர்ந்து மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருந்தாலும் அலெக்ஸி நவல்னி பொதுவெளியில் தொடர்ந்து புதின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்.