13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில், கட்சிகளின் பரிந்துரைகளை ஜனாதிபதியின் செயலாளர் கோரியிருக்கின்றார். இதற்கான உடன்பாடு ஏற்கனவே சர்வ கட்சிக் கூட்டத்தில் எட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு புதிய அரசியல் யாப்பு இல்லை. எவ்வாறான தீர்வுகள் தொடர்பில் பேசுவதாக இருந்தாலும் அது ஒற்றையாட்சிக்குள்தான் பேசப்படும் – இதுதான் ரணிலின் நிலைப்பாடு.புதிய அரசியல் யாப்பின் மூலமான, அரசியல் தீர்வொன்று சாத்தியமில்லை என்பதை இப்போது ரணில் புரிந்துகொண்டிருக்கின்றாரா – அல்லது முன்னர் அதனை புரிந்திருந்தும் அமைதியாக இருந்தாரா? ஒருவேளை முன்னரும் அவர் இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருந்திருந்தால் புதிய அரசியல் யாப்பின் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியுமென்று நம்பிய சம்பந்தனின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது.
புதிய அரசியல் யாப்பு இல்லை. அதற்கான அழுத்தங்களும் வெளியிலிருந்து வரப்போவதில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? ஒன்றில் இந்த விடயத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். அல்லது தாங்கள் கோரும் தீர்வுக்காக ஜனநாயக ரீதியில் போராட வேண்டும்.
தங்களுடைய கட்சி ஆதரவாளர்கள் சிலரை அழைத்து பதாதைகளை உயர்த்திப் பிடிக்கும் போராட்டமல்ல – இலட்சக்கணக்கான மக்களை திரட்டி தங்களின் சுகபோகங்களை இழந்துபோகும் வகையிலான போராட்டமாக இருக்க வேண்டும்.வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தங்களின் கொழும்பு வாழ்வை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். ஆந்திராவில் பொட்டி சிறிராமுலு உயிர் நீங்கும் வரையில் போராடியது போன்று போராட வேண்டும். ஆந்திரதனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து போராடிய ராமுலு இறந்து மூன்றே தினங்களில் புதிய ஆந்திர மாநிலத்தை நேரு அரசாங்கம் அங்கீகரித்தது. அது போன்று தமிழரின் ஜனநாயக போராட்டத்தை கண்டு கொழும்பு கீழிறங்க வேண்டும் – கூடவே இந்தியா மற்றும் மேற்கு உல கும் தமிழரை நோக்கி திரும்ப வேண்டும். அப்படியானதொரு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தயாராக இருக்கின்றனரா? இதனை இலக்காகக் கொண்டு மக்கள் திரள்வார்களா? செல்வநாயகம் காலம் – அதன் பின்னர் அமிர்தலிங்கம் காலத்தில்கூட அவ்வாறானதொரு போராட்டம் இடம்பெறவில்லை. இந்த நிலையில்
இப்போது இருப்பவர்களால் இப்படியானதொரு போராட்டத்தை கற்பனை செய்யக்கூட முடியாது.
இந்திய தூதுவருடன் அமெரிக்க தூதுவரிடம் பேசுவதிலும் பயனில்லை. அவர்களின் எல்லை என்னவென்பதை அவர்கள் கூறிவிட்டனர். இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இந்தியாவின் நிலைப்பாட்டை சரியாகப் புரிந்து கொண்டே தனது புதுடில்லி பயணத்தை நிறைவுசெய்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடி யாகவே 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் பேசி வருகின்றார். கட்சிகளின் முன்மொழிவு கோரப்படுகின்றது. 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்திலேயே இழுபறிகள் காணப்படும்போது அதனைத் தாண்டிச் செல்வது எவ்வாறு?
இந்தக் கேள்விக்கு நமது பக்கத்திலிருக்கும் பதிலோ இலகுவானது – அதாவது, சர்வதேச அழுத்தம் புவிசார் அரசியல் – இவைகள் வாய்ப்பை வாரிவழங்கப் போகின்றது. அதனை பயன்படுத்திக் கொள்வதில்தான்
விடயம் இருக்கின்றது. கடந்த 14 வருடங்களாக இவ்வாறான மந்திரத்தைத்தான் திரும்பத் திரும்ப சிலர் உச்சரித்து வருகின்றனர். ஆனால், அரசியல் உரையாடல்களோ 13ஆவது திருத்தச் சட்டத்தை தாண்டிச் செல்வதாகத் தெரியவில்லை.