கிளீன் சிறிலங்கா திட்டம், தொல்லியல் ஆணைக்குழு போன்றவற்றில் ஒரு தமிழரைக் கூட அவர்கள் நியமிக்கவில்லை. இந்த விடயங்களைப் பார்க்கும் போது ஒருவகையான அமைதியான இனவாத சிந்தனை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என நாங்கள் சிந்திக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இன்று (31) இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் உன்னதமான அகிம்சைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமையினாலேயே எமது இளைஞர்கள் சிங்கள் அரசுக்கு அகிம்சை ரீதியாகப் புரிய வைக்க முடியாது என்று ஆயுத ரீதியில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.
கடந்த 77 வருடங்களாக நாங்கள் பல கட்சிகளின் ஆடைகளைப் பார்த்து வருகின்றோம். இன்று முள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலாவது ஏதேனும் ஒளிக்கீற்று தென்படுமா என்று பார்க்கின்றோம். ஆனால் அவர்கள் இந்த நாட்டில் அபிவிருத்திதான் முக்கிய பிரச்சனை என்று சொல்லி தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வித முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரியவில்லை.
இந்த மாகாணசபை முறைமையை தாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்ற கருத்தோடு நின்றுவிட்டார்கள். சமஸ்டி முறையான ஒரு கூட்டாட்சியை வழங்குவதற்கு ஒருபோதும் அவர்கள் சித்தமாக இல்லை.

ஒற்றையாட்சி எனப்படும் சிங்கள பௌத்த அடக்குமுறையின் கீழ் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக சமத்துவம் இழந்து வாழ வேண்டும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியினரின் சிந்தனையாகவும் இருக்கின்றது.
ஏனெனில் அவர்கள் கொண்டுவந்த கிளீன் சிறிலங்கா திட்டம், தொல்லியல் ஆணைக்குழு போன்றவற்றில் ஒரு தமிழரைக் கூட அவர்கள் நியமிக்கவில்லை. இந்த விடயங்களைப் பார்க்கும் போது ஒருவகையான அமைதியான இனவாத சிந்தனை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என நாங்கள் சிந்திக்கின்றோம்.
அகிம்சை, ஆயுத ரீதியில் போராடிய நாங்கள் தற்போது இராஜதந்திர ரீதியில் நமது பிரச்சனைக்கு ஒரு தீர்வினை பேச்சுவார்த்தைகளை மூலம் காணலாம் என எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்குரிய ஆரோக்கியமான பதில்கள் இந்த இடதுசாரிக் கட்சி என்று சொல்லப்படுகின்ற சோசலிசக் கட்சி ஆட்சிக் காலத்திலும் எமக்குத் தெரியவில்லை. தற்போது ஆறு மாதங்கள் கடந்துள்ளன. இன்னும் சில காலத்தில் அவர்களின் குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும் என அறிய முடியும்.
நாங்கள் பல இழப்புகள், இன அழிப்புகளைச் சந்தித்த சமூகம். எமது தந்தை இயற்கையாக மரணம் எய்திருந்தார். ஆனால் இயற்கையை வென்ற எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஆயுதக் கலாசாரம் நத்தார் ஆராதனையின் போது கொல்லப்பட்டார். அதற்கான நீதியும் கிடைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இங்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் ஜனாதிபதியும் ஒரு கருத்தினை முன்வைத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 21ற்குள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சம்மந்தமாக திருத்தம் ஏற்படும். குற்றத்தில் இருந்து தப்பித்தவர்களுக்குக் கூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த ஆட்சியாளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற விடயம் பட்டலந்த சித்திரவதை முகாம் போன்று எமது இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக உயர்திரு அமரர் இராயப்பு யோசப் அவர்கள் கூறிய விடயத்திற்கும் ஒரு நியாயத்தினை வழங்க வேண்டும். வரும் ஏப்ரல் 21 ற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிகார நீதியை வழங்குவதாக வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அதேசமயம் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலை இருக்கும் இடத்தில் இந்த நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
