அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த புதிய பரஸ்பர கட்டண முறைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக குழுவொன்று அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலுகமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரோப் உமர், ஷெராட் அமலியன் மற்றும் சைப் ஜாபர்ஜி ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.