எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையான அவரின் நகர்வுகள் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்வதற்கு மட்டும் செயற்படுவதாக தெரிகிறது.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த செவ்வியில் “அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர் நோக்கும் சகல பிரச்னைகளுக்கும் இந்த ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுறும் முன்பு தீர்வு காண்பேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்தோடு அந்த கருத்துக்கு வலு சேர்க்கும் முகமாக தமிழ் மக்கள் கோரும் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சர்வகட்சி கூட்டத்தினூடாக அனைத்து கட்சிகளின் நிலைப்பாட்டையும் கோரியிருந்தார்.ஆனால் அரசமைப்பில் இருக்கின்ற ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு கட்சிகளின் நிலைப்பாடு தேவையில்லாத ஒன்று என்றே கூறலாம்.
ஒருவேளை 13 க்கு அப்பால் சென்று தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ வேறு விடயங்களை கேட்டிருந்தால் கட்சிகளின் நிலைப்பாட்டை கேட்பது ஒரு நியாமான விடயம். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வலம் வரும் ரணில் அரசமைப்பில் இருக்கின்ற ஒரு விடயத்தில் அனைத்து கட்சிகளின் நிலைப்பாட்டை கோருவது 13ஆம் திருத்தத்தில் வெட்டு குத்தல்கள் மேற்கொண்டு 13இன் ஊடாக தமிழ் மக்களுக்கு வழங்கும் பொலிஸ் அதிரங்களை தவிர்ப்பதன் மூலம் பெளத்த தேரர்கள்,தென்னிலங்கை அரசியல்வாதிகள்,பெரும்பான்மை மக்கள் என்போரின் ஆதரவினை பெறலாம் என்று சிந்திக்கும் அதேசமயம் தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வில் ஒரு பாகமான வெட்டிக்கழிக்கப்பட்ட 13ஆம் திருத்தச்சட்டத்தை வழங்குவதன் ஊடாகவும் பெரும்பான்மை, சிறுபான்மை மக்களின் வரலாற்று வடிவம் பெற்றிருக்கும் பிரச்சனைகளைகளுக்கு அவரால் மட்டுமே தீர்வு தர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் ஊடாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வாழ் மக்களிடையே தவிர்க்க முடியாத ஒரு ஜனாதிபதி வேட்பாளராக மாற முனைகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.