காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் (06) காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்தது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் காஸா முழுவதும் நேற்று (6) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காஸாவிலிருந்து ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ரொக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ரொக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய காஸாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காஸாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.