பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாங்கொடை, குளிவத்த பிரதேசத்தில் வசிக்கும் விஜேமுனி லலன்த பிரிதிராஜ் குமார என்பவர் ஆவார்.
சந்தேக நபர் இன்று காலை 07.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தை நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் பாதாள உலக கும்பலின் தலைவரான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் என தெரியவந்துள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.