வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது உதயசூரியன் சனசமூக நிலையத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலில் வட்டுவாகல் கோட்டாபய கடற்படையினரால் மக்களுடைய 617 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது, தென்னை, பனைவளம், வயல் நிலங்கள், முந்திரிகை இருந்தும் அதன் பயனை பெற முடியாதளவில் இருக்கின்றோம்.
எங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தினை நாங்கள் பார்க்காமல் போய்விடுவோமோ என்ற பயம் எங்களுக்குள்ளே இருக்கின்றது. கடற்படையினர் தமது சொந்த நிலம் போல் அப்பகுதியின் அருகாலே செல்ல முடியாத நிலை இருக்கிறது.

காணிகளை இழந்த மக்கள் மறுகரையில் அயலவர்களது காணிகளிலும், உறவினர்களது காணிகளிலும் குடியிருக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரிசி , தேங்காய், கஜூ உற்பத்திகள் போன்ற வாழ்வாதாரத்தை நம்பி வாழ்ந்த மக்கள் நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் இந்த மக்களின் பொருளாதாரம் ஒருபடி மேலுயர்ந்திருக்கும்.