மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இன்று (16) காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தொடங்கஸ்லந்த – உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.
அவர் மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.