பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள் எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகிறதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், “இந்த நாட்டில் கம்மன்பில வழக்குகளை விசாரித்து பொதுமக்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால் பிள்ளையான் தனது வழக்கறிஞராக கம்மன்பிலவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பிள்ளையானின் வழக்கை கம்மன்பில கையில் எடுத்துள்ளார், இவை வெறும் அரசியல் படுகொலைகள் அல்ல. இவை ஒரு பெரிய வலையமைப்பிற்குள் செயல்படுத்தப்பட்ட விடயங்களாகும்.தற்போது இந்த நூல் பந்து கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து வருகிறது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இப்போது சுறுசுறுப்பாகி, முன்னர் மறைக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுத்து வருகிறது.
குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் பணியைத் தொடங்குகிறது.
அனைத்து சட்டத் தேவைகளும் தொடர்புடைய நிறுவனங்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன, அதற்கு அரசாங்கம் தேவையான வசதிகளை மட்டுமே வழங்கி வருகிறது.”என்றார்.