விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, ஜனநாயக வழிக்கு வந்து அந்த அமைப்பை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலேயே புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்கேற்ப கருணா அம்மானுக்கு எதிராக பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டது.

அதேபோன்று வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுவும் தெளிவாகின்றது.
பிள்ளையான் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கலாம். ஆனால் புலம்பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யாத தவறுக்காக அவரை தண்டிக்க முற்பட்டால், அதற்கு எதிராக நாம் போராடுவோம்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் ஒரு காரணத்தையும், பொது பாதுகாப்பு அமைச்சர் வேறொரு காரணத்தையும் கூறுகின்றனர்.
பிள்ளையான் செய்த சேவை தொடர்பில் கம்மன்பிலவுக்கு தெரியும். கம்மன்பில எமது அணியில் இருந்தவர். எனவே, அவருக்காக கம்மன்பில முன்னிலையானது சரியான முடிவே. என மேலும் அவர் தெரிவித்தார்.