தமிழரசுக்கட்சி தலைமையின் அவமதிப்பால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் சுயேட்சையில் குறித்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக கீழ் தெரிவிக்கப்பட்டும் சம்பவத்துடன் ஒரு முகநூல் பதிவு பகிரப்பட்டு வருகிறது.
குறித்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,
தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர் தெரிவுக்கான இறுதிச்சுற்று நடைபெற்றது.

ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களுக்கான ஆதரவுக்கரங்களோடு அவரவர் வட்டார தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் சகிதம் கட்சி அலுவலகம் நிரம்பி இருக்க, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சுமந்திரன் அவர்களும், மாவட்ட கிளையின் தலைவர் கௌரவ. குகதாசன் அவர்கள் மற்றும் மாவட்ட கிளையின் சிரேஷ்ர உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.
ஒவ்வொரு வட்டார வேட்பாளர் தேர்வு தொடர்பான கலந்துரையாடலில் அடுத்து சாம்பல்தீவு மக்களுடனானது என்ற தமக்கான சந்தர்ப்பத்தில் ஏற்கனவே சாம்பல்தீவு மக்களால் முன்மொழியப்பட்ட சாம்பல்தீவைச்சேர்ந்த
திரு. சிவசண்முகதாஷ் என்பவரின் விண்ணப்பத்தை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்குமாறும், தமது முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினர் .
அவர்களின் முன்மொழிவையும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும் இடைமறித்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சுமந்திரன் அவர்களின் கருத்தையும் , விண்ணப்பத்தையும் மறுதலித்தோடு விட்டுவிடாமல், அவர்களுடைய சுய கௌரவத்தை பாதிக்கும் வகையில் வார்த்தைகளை வீசியதாகவும் ஒருசந்தர்ப்பத்தில் அவர்களை விரும்பினால் வேறுகட்சிக்கு போனாலும் அல்லது சுயேட்சையாக நின்றாலும் சரி இதுதான் முடிவு என்ற தொனியிலும் பேசியிருக்கிறார்.
அன்று அவர்பேசிய வார்த்தைகளும், அவரின் உடல்மொழியும் தம்முடைய சுயகௌரவத்தை மிகவும் பாதிப்பதாகவும் வேதனைப்பட்டார்கள்.
காரணம் அன்று அங்கு நின்றது வெறுமனே சிவசண்முகதாஸ் என்ற ஓய்வுநிலை கல்விமான் மாத்திரமல்ல அவருக்கு ஆதரவாக அவ்வூரின் ஆலய பரிபாலகர்கள், உள்ளூர் சங்கங்களின் பிரதிநிதிகள் , இளைஞர்கள் மாத்திரமல்ல இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த அல்லது அதற்க்காக தமது உறவுகளை அர்ப்பணித்த அந்த மண்ணின் மூத்தவர்களும் கூடவே இருந்தனராம்.
இந்த அவமரியாதைதான் இன்று சாம்பல்தீவு மக்களின் சுயத்தை அடையாளப்படுத்த வேண்டிய சுழலை உருவாக்கியதாகவே அவர் கூறுகிறார்கள் .

இப்போது நான் அவர்களின் நியாயத்தை உணர்கிறேன் யாழ் மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவரால் எவ்வாறு திருமலையில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்யவும், நிராகரிக்கவும் முடியும் . ?
திருமலையைச்சேர்ந்த ஒருவர் கட்சியின் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ இருப்பின் யாழ் மாவட்டத்தின் வேட்பாளர் தெரிவில் நேரடியாக மூக்கை நுழைக்க முடியுமா ?
நீண்டகால போராட்டத்தில் கணிசமான வகிபாகத்தை வழங்கிய ஒரு ஊரையே அவமதித்து விரல் நீட்டி தகமை தெரியாது தான்தோண்றித்தனமாக பேசும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
அப்படியானால் மாவட்டக்கிளையின் அதிகாரமும் ஆளுமையும் என்ன ? அன்று சம்பவம் நடைபெற்ற போது மாவட்டக்கிளையின் தலைமையும் சிரேஷ்ர நிர்வாகிகளும் என்ன செய்தார்கள் ?
மிகவும் தெளிவான செய்தி இதுதான் அமரர் சம்பந்தனால் பாதி அழிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சி மீதி திரு . சுமந்திரனால் அழிக்கப்படுகிறது.
திரு. சுமந்திரன் அவர்கள் மிகமிக நிதானமாக தனது பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இப்போது சுமந்திரனின் சிந்தனை இதுதான்

இலங்கை தமிழரசுக்கட்சி முழுமையாக அவருக்கு ஆதரவான கூட்டமாக மாறவேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும் இல்லையேல் அந்தக்கட்சி அடையாளம் தெரியாமல் உருமறைக்கப்பட வேண்டும்.
எது எப்படியே சாம்பல்தீவு மக்களுக்குள்ள சுயகௌரவம் ஒவ்வொரு தமிழனுக்கும் உருவாகும் .
நிலமை தொடருமானால் காலத்தில் தந்தை செல்வாவால் கட்டப்பட்டு தேசியத்தலைவரால் புணர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடு பாழடையும் நிலையை நோக்கியே நகரும் .
இதையெல்லாம் உணர்ந்தே தீர்க்கதரிசனமாக அன்றே சொன்னார் எங்கள் மாமனிதர் தந்தை செல்வா
தமிழரை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்படுகிறது.