மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கோக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த தீவிபத்து சம்பவம் இன்று (24) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
வீட்டுடன் இணைந்த வர்த்தக நிலைய தொகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டிலிருந்தவர்களை காப்பாற்றியபோதிலும் பெருமளவான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீவிபத்தினை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவும் கொக்கட்டிச்சோலை இராணுவ முகாம் இராணுவத்தினரும் பொலிஸாரும் உதவிய நிலையில் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதன்போது கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையென்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
