உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக, எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான எந்தவொரு உத்தரவு அல்லது நீதிமன்ற தீர்ப்பும் அரசியலமைப்பு மீறலாக அமையும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவிற்கு அமைய, அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்தின் வசம் காணப்படுவதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டமானது அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்ற அரச நிதி தொடர்பான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நினைவுபடுத்தினார்.
அதற்கமைய, குறித்த யோசனையானது உயர் நீதிமன்றத்தில் அல்லது 1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட வேறு எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணைக்குட்படுத்த, மறுபரிசீலனை செய்ய அல்லது சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாது என்பது சபாநாயகரின் நிலைப்பாடாகும்.
பாராளுமன்ற செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த அல்லது தலையீடு செய்ய நீதிமன்றத்திற்கு முடியாது என முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க மிகத் தௌிவாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.