பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமிம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜியோ நியூஸ், சமா டிவி, போல் நியூஸ், ஜிஎன்என் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களின் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் போன்ற பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த 16 யூடியூப் சேனல்களின் மொத்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6.30 கோடி ஆகும்.
இந்த சேனல்களை இந்திய பயனர்கள் அணுகினால், “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக இந்த உள்ளடக்கம் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.