புதிய அரசாங்கம் தேர்தலை நடாத்துவதை மட்டுமே வேலைத்திட்டங்களாக கொண்டுள்ளதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, தமது போராட்டத்தினை இல்லாமல்செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அமலநாயகி அமல்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் நேற்று (28) காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அமலநாயகி அமல்ராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.
இதன்போது தலைவராக மீண்டும் திருமதி அமலநாயகி அமல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.
செயலாளராக திருமதி ராஜன் தேவகி தெரிசெய்யப்பட்டதுடன் பொருளாளராக ரவிச்சந்திரன் வினோஜியா தெரிவுசெய்யப்பட்டார்.
சங்கத்தின் உபதலைவராக வீ.குருகுலசிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன் உபசெயலாளராக செ.திலகவதி தெரிவுசெய்யப்பட்டதுடன் ஒவ்வொரு பகுதிகளுக்குமான இணைப்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டது.

நிர்வாக தெரிவினை தொடர்ந்து சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்துப்பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கேட்கவேண்டிய கால சூழ்நிலையிலிருக்கின்றோம். தற்போதுள்ள ஆட்சிமாற்றத்திலும் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
புதிய ஆட்சிவந்ததும் ஏதோ புதிய ஆட்சிவந்துள்ளது எங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிட்டது என்று நீங்கள் ஒருபோதும் கனவு காணவேண்டாம். கடந்தகால ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றி எவ்வாறு எமது இனத்தினை அழித்தார்களோ அதனைவிட படுமோசமான அரசியல் வியூகத்திற்குள்ளேயே நாங்கள் தற்போது நின்றுகொண்டிருக்கின்றோம்.

காணாமல்ஆக்கப்பட்டோர் விடயப்பரப்பிற்குள் பல விடயங்களை செய்யப்போகின்றோம், உண்மையினை கண்டறியப்போகின்றோம், நியாயங்களை சொல்வோம் என்று கூறி ஆட்சிக்குவந்தவர்கள் மூன்று தேர்தல்களை நடாத்தியது மட்டுமே வேலைத்திட்டமாக இருந்ததே தவிர காணாமல்ஆக்கப்பட்டவர்கள் விடயத்தினை வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி தமது போராட்டத்தினை இல்லாமல்செய்யும் முயற்சியை திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றது.
நாங்கள் கேட்டுக்கொண்டிருப்பது உள்ளகப்பொறிமுறை அல்ல. சர்வதேச நீதிப்பொறிமுறையினையே நாங்கள் கேட்டுநிற்கின்றோம். எங்களது போராட்டங்களின் வடிவங்களே இன்று சர்வதேச அழுத்தம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்படுகின்றது. அதன்காரணமாகவே காணாமல்ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தினை ஒரு மாயையாக காட்டி எமது போராட்டத்தினையையும் கோரிக்கையினையும் முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் தங்களை நல்லரசாக காட்ட சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

இன்று பல்வேறுபட்டவர்கள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்திற்குள் வந்து அதற்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதனை தங்களுக்கு சார்பாக கையாண்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி மனரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், உணர்வுகளை மழுங்கடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசாங்கம் மற்றும் அதன் புலனாய்வு கட்டமைப்புகள் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ள அதேநேரத்தில் எங்களுடன் அதிகளவின் பயணிக்கின்றவர்களும் இதனை பிளவுபடுத்தும் முயற்சியில் செயற்படுகின்றனர்.
நாங்கள் இன்று வீதியில் நின்று போராடுவது எங்களது சந்ததிகளுக்காக. எங்களுக்கு நடந்த இந்த அநியாயம், அட்டூழியங்கள் எதிர்கால சமூகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடிவருகின்றோம்.