மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் வாகனங்களில் பொருத்துவதற்கான உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த நிறுவனத்துக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பெரும் தொகையொன்றை செலுத்தாமல் நிலுவையாக வைத்திருப்பதன் காரணமாக, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வாகன இலக்கத் தகடு உற்பத்திகளை அந்த நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

இதன் காரணமாக புதிய வாகனங்கள் பதிவு செய்தல் மற்றும் உரிமையாளர் மாற்றம் செய்த வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறான ஒரு சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோர் தலையிட்டு, அதனை சீர்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.