பஹல்காம் தாக்குதலையடுத்து, ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் இராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலுல் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் தெரிவித்ததாவது, இந்திய வான்பரப்பில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதலானது கோழைத்தனமான இந்தியாவின் நடவடிக்கை. இதற்கு தக்க பதிலடியை, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும். இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது. துக்கம் சூழவுள்ளது என்று கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார்.

தொடர்ந்து, ”இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், இராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும்’’ என்று ஐ.நா. பொதுச்செயலர் குட்டரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து புதன்கிழமை காலை 10 மணியளவில் விவரம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இந்தியா விளக்கமளிக்கிறது.